தொலைக்காட்சி பேட்டியின் ஒலிப்பான் செயலிழந்து விட்டதா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மிக மிக மெல்லிய சத்தத்துடன் தொலைகாட்சி ஓடிக் கொண்டிருந்தது.. கேட்பார் யாருமில்லாமல் மின்னிக்கொண்டிருந்த அந்த தொலைக்காட்சியில் சிறிதும் நாட்டம் செலுத்தாமல், அதற்கு நேர் எதிரே நாற்காலியில் மஞ்சு உட்கார்ந்திருந்தாள்.. அவள் கண்கள் மட்டும் வெறுமென தொலைகாட்சி திரையை பார்த்துக்கொண்டிருக்க, அவள் கவனம் முழுவதும் அவள் காதில் இருந்த கைப்பேசியில் தான் இருந்தது..
மஞ்சுவுக்கு அப்படியே பின்னால் அவள் பெற்றெடுத்த கலை கண்களில் கொப்பளிக்கும் கோபத்துடன் பத்திரகாளி போல நின்றிருந்தாள்.. மஞ்சு பேசும் வார்த்தைகள் யாவும் அலையாய் பறந்து கலையின் செவியை வந்தடைவதற்குள் இருவருக்குள்ளும் இருந்த தொலைவு காரணமாக வார்த்தைகள் காற்றில் கரைந்து போனது.. “தன் தாய் என்ன பேசுகிறாள்?” என்ற கலையின் கேள்விக்கு, இருவருக்குள்ளும் இருந்த தொலைவு விடை கொடுக்க மறுத்தது. அதே போல “அந்த நயவஞ்சகனோடு பேசும் பொழுது தன் தாயின் முகப்பாவனை எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு, மஞ்சு அமர்ந்திருந்த விதம் விடை மறுத்தது..
“என்ன பேசுகிறாள் என்று தெரியவில்லை, எப்படி பேசுகிறாள் தெரியவில்லை” என்ற ஆதங்கம் அவளின் கோபத்தில் எண்ணெய் தெளித்து விட, வேகமாக மஞ்சுவின் முன் நின்றாள்..
கலை: யாரு கூட பேசிட்டு இருக்குற இப்போ??
கலையை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், அவளை உதாசீன படுத்தி விட்டு, கைபேசியில் “ஆமா அவ தான்.. வந்து மொறச்சிட்டு நிக்குறா!! வேலையும் தொலைச்சிட்டு, எவனையோ கூட்டி வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம லவ் பன்றேன்னு சொல்லிட்டு, இப்போ என்னை வந்து மொறச்சிட்டு நிக்குறா!!!”
கைபேசி எதிர்முனை: (மஞ்சுவின் காதில் ஏதோ சொல்ல)..
மஞ்சு: (ஒரு பெரிய ஏளனச்சிரிப்புடன்) என்னது பாவமா? யாரு இவளா? பாவம்..
பொறுமையிழந்த கலை “நான் கேட்டது காதுல விழலையா? என்னை மதிக்காம அவன் கூட கொஞ்சிகிட்டு இருக்குற”
மஞ்சுவுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை.. முகம் முழுக்க கோபத்துடன் “என்னடி ஓடுகாலி, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற.. அவன் இவன் ன்னு சொல்லுற”
கைபேசி எதிர்முனை மஞ்சுவிடம் ஏதோ சொல்ல, மஞ்சு பதிலுக்கு “தெரியல திடீர்னு பைத்தியம் வந்தா மாதிரி கத்திக்கிட்டு இருக்குறா”
கலை “நான் சொல்ல சொல்ல பேசிட்டே இருக்குற” என்றபடி மஞ்சுவின் கையில் இருந்த கைபேசியை பிடுங்க முற்பட்டு அதன் பாதியை கையில் பற்றினாள். மீதமிருந்த பாதியை மஞ்சு கெட்டியாக பற்றி இருந்தாள்..
இருவரும் கைபேசியின் சமபாதியை கையில் கெட்டியாக பற்றி இழுக்க, கைபேசியில் இருந்து “ஹலோ ஹலோ” என்ற மிக மெல்லிய சத்தங்கள் வந்து கொண்டே இருந்தது..
இளமை துடிப்பும், ராகுலின் மேலிருந்த கோபமும் கலைக்கு சற்று வலு கொடுக்க, வெடுக்கென மஞ்சுவின் கையில் இருந்து கைபேசியை உருவி இழுத்தாள்.. இழுத்த வேகத்தில், கைபேசியானது கலையின் கையில் இருந்தும் நழுவி மேலே பறந்தது.. மேலே சுற்றி கொண்டிருந்த மின் விசிறியின் ரெக்கையில் மோத, தட் என்ற பெரிய சத்தத்துடன் கைபேசி சிதறி கூடத்தின் ஒரு ஒரு மூலைக்கும் பல துண்டுகளாய் பறந்து விழுந்தது.. கைபேசியை பலமாக அடித்து விட்டு மின்விசிறியும் சில சுற்றுக்கள் தள்ளாடிவிட்டு பின்பு பழைய நிலைக்கு மீண்டு சுற்றி கொண்டிருந்தது..
மின் விசிறியின் கீச் கீச் சத்தம், தொலைகாட்சி பெட்டியின் சின்ன பாடல் சத்தம் அனைத்தையும் தாண்டி மஞ்சுவின் சுவாசத்தின் ஒலி கூடத்தை நிறைத்து இருந்தது.. அந்த சில வினாடிகளில் என்ன நடந்தது என்பதை நம்ப முடியாமல், ஒவ்வொரு மூலையிலும் சிதறி கிடந்த கைபேசி துண்டுகளை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..
எதிரில் கலையின் முகத்தில் தெரிந்த நிம்மதி புன்னகையை பார்த்ததும் மஞ்சுவுக்கு ஏக்கம் கோபமாக உருவெடுத்தது..
“அது என் தம்பி வாங்கி கொடுத்த போனு டி” என்று மஞ்சு சொல்லிய அதே நொடியில், இவ்வளவு காலமாக கலையின் கன்னத்தை மென்மையாய் தடவிக் கொடுத்த அன்பை வீசிய மஞ்சுவின் கரமானது இப்பொழுது வேகமாக காற்றை கிழித்து கொண்டு கலையின் கன்னத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது..
கலை சுதாரித்து முகத்தை திருப்பும் முன்னரே மஞ்சுவின் கரம் கலையின் கன்னத்தில் கைரேகையே ஒட்டுமளவு பதிந்தது.. கலைக்கு பொறி கலங்கி ஒரு வினாடி கண்ணை கட்டியது.. அதில் சற்று தெளிந்து “ம்மா...” என்று சொல்ல, யானை தன் முன் காலால் ஒருவனை வதைப்பது போல, தன் இரு கைகளையும் மேலே தூக்கி ஒன்றாக கலையின் முகத்தில் அடித்தாள்.. கலையின் முன் முடிகள் கலைந்து அலங்கோலமானாள்..
“அவனுக்காக என்னை அடிக்கிறியா?” எனறு கலை கேட்க மறுபடியும் மஞ்சுவின் கைகள் கலையை தாக்க வந்தது.. இம்முறை மஞ்சுவின் கையை கெட்டியாக பிடித்த கலை, அவளை இரண்டடி நகர்த்தி கொண்டு போய் தள்ளி விட்டாள்.. மஞ்சு தடுமாறி கீழே விழுந்து கிடக்க.. கலை வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..
ராம்: ண்ணே!! ஒண்ணுமே இல்லாம, ஒரு உப்பு சப்பும் இல்லாம உன்னால ஒரு மணி நேரம் பேச முடியுமா??
கிஷோர்: டேய் என்னடா சொல்ற?
ராம்: சரி விடு.. அப்படி பேசுறவங்க கிட்ட உன்னால காது கொடுத்து கேட்க முடியுமா?
கிஷோர்: ப்ப்ச்ச்!! கொஞ்சம் தெளிவா தான் பேசேன் டா..
ராம்: ஒன்னும் இல்லண்ணே!! வனிதாவையும் என்னையும் தான் சொன்னேன்.. சரி நீ ஏதோ பேசணும் ன்னு சொன்னியே.. என்ன விஷயம்?
கிஷோர்: (ராமின் கைபேசியை பார்த்தவாறு) மறுபடி வனிதா போன் போட மாட்டால்ல..
ஆனால் அந்த நொடியே கிஷோரின் செல் சிணுங்கியது.. எடுத்து பார்த்தால் “Pondati Calling” என்று திரை மின்னியது..
ராம்: அதுக்குள்ளயே பொண்டாட்டி ன்னு சேவ் பண்ணி வச்சுருக்க.. சரி எடுத்து பேசு.. நாம அப்புறம் பேசிப்போம்..
கிஷோர்: இல்லடா நான் அவகூட அப்புறம் பேசிக்குறேன்..
ராம்: சரி என்ன விஷயம் சொல்லு..
“The person you are calling is not answering your phone”
அறையின் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த கலை கைபேசியை சோகத்துடன் மெத்தையில் தூக்கி போட்டு, தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள அந்த சமயத்தில் ஆள் இல்லாமல் தனக்குள் நொந்து கொண்டாள்..
வீட்டின் வாசலில் புல்லட் சத்தம் கேட்டது.. தந்தை வந்து விட்டார் என்று உணர்ந்த கலை வெளியே செல்லலாமா? வேண்டாமா? என்று தயங்கி கொண்டிருந்தாள்.. சென்றால் தந்தையிடம் என்ன கூறுவது? அம்மா உங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதை தவறி செல்கிறாள் என்று சொல்வதா? என்ன செய்வது? என்று தெரியாமல் கலை தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருக்க, நிமிடங்களும் கடந்து செல்ல, கூடத்திலிருந்து ராஜாராமின் குரல் கலையை அழைத்தது..
ராஜாராம்: கலை கொஞ்சம் இங்க வா..
ராஜாராமின் குரலில் கோவத்தின் சாயல் கொஞ்சம் அடித்தது..
கலை அறைக்கதவை திறந்து வெளியே வர.. ராஜாராம் சோஃபாவில் கலையின் அறையை நோக்கி அவளை எதிர்பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.. அவர் கையில் உடைந்த கைபேசியின் கண்ணாடி திரை உட்பட சில பாகங்கள் இருந்தது..
கலை அறையில் இருந்து வெளியே வந்ததும், “நீங்களே அவகிட்ட பேசிக்கோங்க” என்று மஞ்சு அங்கிருந்து நகர்ந்து அடுப்பறைக்குள் நுழைந்து கொண்டாள்.. கலை மெதுவாக ராஜாராமிற்கு எதிரில் அமர்ந்தாள்.. அவள் கன்னத்தை கவனித்த ராஜாராம்..
“ஏய்ய்ய்ய்ய்……… புள்ளைய எதுக்கு டி இப்புடி அடிச்சு வச்சிருக்க?”
மஞ்சு: ஆமா.. நல்ல புள்ள.. அவ கையை உடச்சு அடுப்புக்குள்ள வச்சுருக்கணும்.. அவ கன்னத்தோட விட்டதை நெனச்சு சந்தோச பட்டுக்கோங்க..
ராஜாராம்: என்னடா குட்டி.. எதுக்கு அம்மா போன ஒடச்ச??
கலை பதில் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு கோபத்தில் விரல் நகத்தின் நுனியை பிய்த்துக்கொண்டிருந்தாள்..
ராஜாராம்: உன்ன தான் டா கேக்குறேன்.. அப்புடி என்ன கோவம் ஒனக்கு.. அது உன் மாமா வாங்கி கொடுத்த போன் தெரியுமா? அத போட்டு ஒடச்சிருக்க.. உன்னைய செல்லம் கொடுத்து வளத்தத்துக்கு காசோட அரும தெரியாம போன போட்டு ஒடைக்கிற..
அடுப்பறைக்குள்ளிருந்து மஞ்சு “காரணமே இல்லாம என்கிட்ட அப்படி துள்ளிக்கிட்டு வந்த.. இப்போ உங்கப்பா கேக்குறார்ல சொல்லு டி”
ராஜாராம்: நான் தான் கேக்குறேன் ல.. நீ வாய மூடு மொதல்ல.. (பின் கலையிடம் திரும்பி) அப்பா மேல உனக்கு என்னமா கோவம்… என்னை வேற மரியாதை இல்லாம பேசுற..
கலை பதறிக்கொண்டு “நான் எப்போ ப்பா உங்களை மரியாதை இல்லாம பேசுனேன்”
ராஜாராம்: போன் ல அவன் இவன் ன்னு சொன்னியே? என்னாச்சு டா உனக்கு..
கலை: ப்பா நான் உங்களை சொல்லல ப்பா.. அம்மா அந்த ராகுல் கூட பேசிக்கிட்டு இருந்தா.. நான் அவனை தான் சொன்னேன்..
ராஜாராம்: நான் தான் டா உங்கம்மா கூட பேசிட்டு இருந்தேன்..
இடம்: ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர்
கையை கன்னத்தில் வைத்தபடி சுபர்ணா உட்கார்ந்திருந்தாள்.. பக்கத்தில் ராகுல் சிரித்தபடி அவளையே பார்த்துவிட்டு “என்ன டார்லிங் ரொம்ப சோகமா இருக்க”
சுபர்ணா: பாவம் கலை.. நானும் நீ சொல்ற மாதிரிலாம் பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு ரொம்ப கில்டி ஆ இருக்கு டா.. என் போன் ல நீயே கலைக்கு போன் போட்டு கொடுத்து எதுக்கு அப்படி சொல்ல சொன்ன.. பாவம் டா அவ.. இன்னும் என்ன டா பண்ண போற..
ராகுல் அவள் காதருகில் உதட்டை வைத்து ஹஸ்கி வாய்ஸில் “Let’s wait and see.. Shall we?” என்றான்..
இடம்: கலையின் வீடு
ராஜாராம்: நான் தான் டா உங்கம்மா கூட பேசிட்டு இருந்தேன்.. அந்த பையனை பத்தி நான் விசாரிச்சு வச்சேன்.. ரொம்ப நல்ல பையன் ன்னு உங்கம்மா கிட்ட சொல்லி உங்கம்மா மனச மாத்தலாம் ன்னு பேசிட்டு இருந்தேன்.. நீ என்னடான்னா!! இப்படி பண்ணி வச்சிருக்க..
கலைக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.. அவள் காதுக்குள் சுபர்ணாவின் குரல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.. “சரி யாருகிட்ட பேசுறான் ன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்போ மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு”
மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு
மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு
மஞ்சு ன்னு நேம் இருந்துச்சு
ராஜாராமின் குரல் கலையை சுபர்ணாவின் குரலில் இருந்து எழ செய்தது..
ராஜாராம்: சொல்லு டா அம்மா எதுக்கு அந்த பையன் கூட பேசணும்..
மஞ்சு கொஞ்சம் பின்னோக்கி கலையின் வார்த்தைகளை யோசித்து பார்த்தாள்.. “நான் கேட்டது காதுல விழலையா? என்னை மதிக்காம அவன் கூட கொஞ்சிகிட்டு இருக்குற”..
மஞ்சு: அந்த முண்டைக்கு பயித்தியம் பிடிச்சிருக்கு.. அந்த தம்பி கூட நான் எதுக்கு பேசணும்..
ராஜாராம்: ஏய்ய்… வாய மூடுறியா?? இல்ல அங்க வந்து உன்னை வெளுக்கவா?? (அதே கோபக்குரலோடு கலையிடம் திரும்பி) குட்டி உன்கிட்ட தான கேக்குறேன்.. அம்மா எதுக்கு அந்த பையன் கூட பேச போறா??
கலை: ப்பா!! அது.. நானும் கிஷோரும் லவ் பண்றது அவனுக்கு பிடிக்கல.. எங்க கிட்ட வம்பு பண்ணான், கிஷோரை அசிங்க அசிங்கமா பேசுனான்.. நான் அவனை அடிச்சேன்.. அதுக்கு தான் அவன் பழி வாங்க ட்ரை பண்ணி எதோ பன்றான் ப்பா.. அவன் அம்மா கிட்ட (தயங்கி நின்றாள்)..
மஞ்சு: என்னது அடிச்சியா?? ஏங்க இவ அந்த கிஷோரை கட்டிக்கிட்டு நாசமா போக கூடாது ன்னு அந்த பையன் கிட்ட சொன்னேன்.. அதுக்கு அந்த தம்பி அக்கறையா கேட்டுட்டு, உதவி பண்றேன் ன்னு சொல்லுச்சு.. அதுக்கு தான் இந்த ஓடுகாலி இப்போ அந்த தம்பிய இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறா.. எந்த உலகத்துலயாச்சும் அடியும் வாங்கிட்டு வேலையும் கொடுத்து அந்த குடும்பத்துக்கு நல்லதும் பண்ணுவாங்களா? இவ சொல்றதுல ஒண்ணாச்சும் நம்புற மாதிரி இருக்கா? புதுசா லவ் பண்ணிக்கிட்டு அவன் சொல்றதுக்கெல்லாம் இப்படி ஆடுறா.. அவன் தான் இவளை என்னென்னமோ சொல்லி மயக்கி வச்சிருக்கான்..
ராஜாராம்: நீ வாய வச்சிக்கிட்டு சும்மா இரு.. புரியாம எதையும் பேசாத.. மாப்ள அந்த மாதிரி லாம் கிடையாது.. நான் விசாரிச்சும் பாத்துட்டேன்.. மாப்ள வீட்டுல இருந்து முறைப்படி பொண்ணு பாக்க வர சொல்லிருக்கேன்.. அவங்க வந்தப்புறம் உன் ஓட்ட வாய வச்சு ஏதாச்சும் உளறி தொலச்சுறாத..
ராஜாராமிற்கு கிஷோரின் மேல் அசையாத நம்பிக்கை இருந்தாலும் தற்போது ராகுலின் மேல் கலை வைத்த குற்றச்சாட்டை நம்ப முடியவில்லை.. கலை குழம்பி போய் இருக்கிறாள் என்று நினைத்தார்..
ராஜாராம்: சரி டா குட்டி.. நீ அந்த பையனை அடிச்ச.. அதுக்கு அந்த பையன் என்ன பண்ணான்..
கலை: ஒன்னும் பண்ணல ப்பா.. நாங்க வந்துட்டோம்.. அதான் அவன் இப்போ வேற மாதிரி பழி வாங்க ட்ரை பண்றான் ப்பா..
ராஜாராம்: (சிறிதும் நம்பாமல் கலையின் நடவடிக்கை நினைத்து பெருமூச்சு விட்டு) ஏன் டா குட்டி.. என்னாச்சு.. உண்மையா என்ன நடந்துச்சு ன்னு சொல்லு.. அப்பா எப்போவும் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்..
கலை: ப்பா என்னப்பா நீங்க எதுவும் நீங்க நம்ப மாட்டிங்குறீங்க.. நான் உண்மைய மட்டும் தான் சொல்றேன்.. கிஷோர் கிட்ட வேணா கேளுங்க.. சரி கிஷோர் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான் ன்னு நினச்சு நீங்க அவனையும் நம்ப மாட்டீங்க.. அப்போ அந்த சுபர்..
“வேற யாரு ம்மா??“ என்று ராஜாராம் கேக்க “இப்பொழுது வீட்டில் பிரளயம் வெடித்ததுக்கு காரணமே அந்த சுபர்ணா தான்” என்று நினைத்து “வேற யாரும் இல்ல ப்பா.. விடுங்க நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்க”
ராஜாராமிற்கு தன் மகளை நினைத்து கவலைப்பட்டு “சரிடா குட்டி.. அவன் அம்மா கிட்ட ன்னு என்னமோ சொல்ல வந்த.. அவன் அம்மாகிட்ட என்ன??
கலை: அம்மா கிட்ட தப்பா நடக்க பாக்குறான் ப்பா..
தன் தோழியின் மகனை பத்தி கலை அவதூறாக பேசப்பேச மஞ்சுவுக்கு உடல் முழுக்க சூடான எண்ணெய் ஊத்துவது போல இருக்க.. வேகமாக வந்து கலையின் தலை முடியை பிடித்து “என் பிரண்ட் ஓட புள்ளையை பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்ன கொன்னே போட்ருவேன் டி”
மஞ்சுவை பிடித்து தள்ளிவிட்டு நிதானத்தை மறந்த கலை வார்த்தைகளை கவனமின்றி விட்டாள்.. “ஆமா உனக்கும் அவன்மேல ஆசை இருக்கு போல.. அதான் அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற”
“பளார்ர்ர்ர்” என்ற சத்தம் வீட்டை நிறைத்தது..
ராஜாராம்: பெத்த அம்மா வ இப்படி பேச உனக்கு நாக்கு கூசல..
கலை தனது கையை கன்னத்தில் பொத்தியபடி அதிர்ந்து போய் சிலையாக இருந்தாள்.. அவளது அப்பா அவளது கன்னத்தில் அறைந்தார் என்ற நிகழ்வை அவளால் நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் அவள் வாய் திறந்து இருக்க, அவள் கண்கள் ராஜாராமை “நீங்களா அடிச்சீங்க” என்பது போல பார்த்துக் கொண்டிருந்தது..
“ப்பா” என்று அவள் உதடுகள் உச்சரிக்க, அவள் கண்களில் இருந்து கட்டுப்பாடின்றி நீர் வடிந்து கொண்டே இருந்தது..
No comments:
Post a Comment